வேலும் தமிழும்


தமிழ் மொழி மற்றும் அதன் மக்களை பற்றி பேசும்போது முருக கடவுளை பற்றி கூறாமல் இருக்கவே முடியாது. முருகனைப் பற்றி பேசுகையில் அவர் கையில் இருக்கும் வேலை விட்டுவிட முடியுமோ “வேலுண்டு வினை இல்லை” ஆச்சே. முருகனும் வேலும் ஒன்று தான் என்பார்கள் நம் முன்னோர்கள்.

அதன் அர்த்தத்தை பின்வருமாறு சொல்கிறேன். சரி, மேலே குறிப்பிட்ட தலைப்பு போல முருகனுக்கும் தமிழுக்கும் இடையே என்ன சம்பந்தம், ஏன் தமிழ் மக்கள் குறிப்பாக முருக கடவுளை இவ்வளவு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் பூஜிக்கிறார்கள். சற்று விரிவாக நான் கண்டு, படித்து, கேட்ட செய்திகளை இங்கே பதிவிடுகிறேன்.

தமிழும் முருகனும்

தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, பக்தர்களுக்கு ஒளி குடுக்கும் ஆறுமுகனின் கண்கள் பன்னிரெண்டு.

தமிழி எழுத்துக்களை இனமாக பிரித்தால். மூன்று இனம் வல்லினம், மெல்லினம், இடையினம்.

  1. வல்லினம் – க, ச, ட, த, ப, ற
  2. மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
  3. இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள

இந்த மூன்றில் ஒவ்வொரு இனத்திலும் ஒரு எழுத்தை எடுத்து “முருகு” என்று பெயர் வைத்துள்ளார்கள். அதே போலத்தான் “தமிழ்” சொல்லும் மூன்றில் ஒவ்வொரு இனத்திலும் ஒரு எழுத்தை எடுத்து பேர் சூட்டி சிறப்பித்திருக்கிறார்கள். அதில் சிறப்பு ழகரம் தமிழ் மொழிக்கே உறிய சிறப்பு.

  1. “தமிழ்” என்ற சொல்லில் “த” – வல்லினம். “மி” – மெல்லினம். “ழ்” – இடையினம்.
  2. “முருகு” என்ற சொல்லில் “மு” – மெல்லினம். “ரு” – இடையினம். “கு” – வல்லினம்.

“முருகு” என்ற பெயரின் காரணம் “அழகு, இளமை, பெருமை, உயர்வு, முதுமை இல்லாமை” போன்ற இன்னும் பல அர்த்தங்கள் உள்ளன.

இனம் ஒன்றுக்கு ஆறு எழுத்தாக பிரித்தார்கள் அப்படி பார்க்கும் பொது இனம் ஒன்றுக்கு எழுத்துக்கள் ஆறு முருகனின் சிறங்கள் (தலைகள்) ஆறு.

முருகனுக்குத் திருமுகமும் கைகளும் மொத்தம் பதினெட்டு. தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. (வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய ஒவ்வொரு தமிழின எழுத்துக்கள் ஆறு. மொத்தம் பதினெட்டு).

வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய தமிழ் இனங்களில் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் உட்கரு விளக்கம் கூறும் அர்த்தம் தமிழ் இனங்களின் எழுத்து ஆறில் “ச, ர, வ, ண, ப, வ” உள்ளடங்கும்.

முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து “ஃ” தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுத எழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், அந்த புள்ளிகளை இணைத்தால் வேல் வடிவில் அமைந்து இருக்கும். இந்த ஆயுத எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை.

கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் குழந்தை முழுமையாக வளர 247 நாட்கள் ஆகின்றன என இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இதை கண்டு பிடித்தான். புரியவில்லையா? தமிழில் உள்ள மொத்த எழுத்தக்கள் 247.

முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றால் அழகு. எனவே, முருகன் வேறு, தமிழ் வேறு அல்ல.. முருகனே தமிழ், தமிழே முருகன்.

சரி மேலே குறிப்பிட்ட தகவலை ஆன்மிகம் வழியாக இல்லாமல் நாத்திகம் பேசுவோர் வாயிலாக பார்த்தாலும் கூட, அன்றைய தமிழர்கள் பேசுகின்ற மொழிக்கு உருவம் கொடுத்து பேசுகின்ற மொழியை அந்த உருவத்தின் ஊடாக வலிபட்டு கொண்டாடி வாழ்ந்திருக்கிறார்கள்.

அன்றைய தமிழர்கள் விஞ்ஞானிகள். தமிழர்களின் வாழ்க்கையையும் மொழியையும் ஒன்றாக கலந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

Exit mobile version