உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!!

வணக்கம்!

இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ளது. அதற்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு அனைவரும் பயன்படுத்தும் தொலைபேசி.

மனிதனின் கண்டுபிடிப்புகளுக்கு எல்லை அற்று போனது. பஞ்சபூதங்களில் இருந்து மின்சாரம், இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் கருவிகள், பிறரிடம் உடனடியாக தொடர்புகொள்ள உதவும் எண்ணற்ற சாதனங்கள், இடம் விட்டு இடம் பயணம் செய்ய வியக்க வைக்கும் போக்குவரத்து சாதனங்கள், அப்பப்பா எவ்வளவு உயர்ந்த மாற்றம்… இவ்வாறு மனிதன் ஒவ்வொரு நாளும் மெம்மேலும் என்னால் முடியும் என்று நிரூபித்து கொண்டே வருகிறான்

அனால் மனிதனால் இந்த ஒரு செயலை செய்ய முடியவே முடியாது என்கிறார். அவர் யார்? எது முடியாது?

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே

தாயுமானவர்

உரை:

குதிரை, மதயானையை வசமா நடத்தலாம். கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின்மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் இட்டு ஐந்து உலோகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.

வேற யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் – ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் – கனல்) மேல் தங்கி இருக்கலாம். தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம்.

ஆனால், மிக்க கடினம் யாதெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது”. உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே.

பொருள்:

அதாவது ஒரு மனிதனால் என்னவெல்லாம் முடியும்…

 1. யாருக்கும் அடங்காத குதிரையை மதம் பிடித்த யானையை அடக்கிவிட முடியும்.
 2. கரடி அல்லது புளியை பிடித்து அதன் வாயை கட்ட முடியும்.
 3. பாம்பை பிடித்து நடனம் ஆட வைக்க முடியும்.
 4. நெருப்பில் ஐந்து உலோகங்களை உருக்கி ஒன்று சேர்த்து தங்கமாக மாற்றி விற்று உண்ண முடியும்.
 5. யார் கண்ணிலும் படாமல் உலகம் முழுவதும் சுற்றிவர முடியும்.
 6. விண்ணுலகில் வாழும் தேவர்களை வேலை வாங்க முடியும்.
 7. எப்போதும் இளமையாகவே இருக்க முடியும்.
 8. உடல் விட்டு உடல் (கூடு விட்டு கூடு பாய்தல்) மாற முடியும்.
 9. நீரின் மேல் நடக்க முடியும்.
 10. நெருப்பின் மேல் படுக்க முடியும்.
 11. யாராலும் பெற முடியாத அறிவை பெற முடியும்.

அனால், ஒரு நிமிடம் “மனதை அடக்கி எதையும் யோசிக்காமல் சும்மா இருக்கின்ற” திறமையை அடைவது முடியாத காரியம்…

Exit mobile version