ஓணம் தமிழர் பண்டிகையா?

திருவோணம் நன்நாள்!

இந்த திருவிழா இக்காலத்தில் கேரள மக்களாலும் தமிழகத்தில் பெரும்பாலான மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஓணம் பண்டிகை யாருடைய பண்டிகை… இதன் பின்கதை என்ன?

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் என்ற புலவரால் இயற்றப்பட்ட “மதுரை காஞ்சி” என்ற நூல் இந்த திருவோண நன்னாளில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஒரு நூலை சிறப்பு நாள்களில் அரங்கேற்றம் செய்வது என்பது நம் தமிழ் புலவர்களின் மரபு.

மேலும் ஓண நன்னாளை பற்றி மருதனார் தன் செய்யுளின் மூலம் கூறும் செய்தியை பாருங்கள்

கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்

மாயோன் மேய ஓண நன் நாள்

கோணம் தின்ற வடு வாழ் முகத்த

மாங்குடி மருதனார்

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் இதே திருவோண நாளை குறிப்பிட்டிருக்கிறார்,

“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு

வோணத் திருவிழாவில்

அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை

பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்

தாண்டென்று பாடுதமே”

பெரியாழ்வார்

இன்னும் சிறப்பாக சொல்லவேண்டும் என்றால் நம் தமிழ் புலவர்களுள் பெரிதும் போற்றப்பெற்ற திருஞானசம்பந்தர், எரிந்து சாம்பல் ஆனா பூம்பாவை என்ற பெண்ணை சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பிக்கும் போது. அவர் கூறியதாவது

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

திருஞானசம்பந்தர்

இவ்வாறாக சங்ககாலம் தொடங்கி நம்முடைய பண்டிகையாக இருந்த திருவோணம் பின்பு தமிழ்நாட்டோடு சேர்ந்த சேரர்கள் ஆட்சி காலத்தில் சேரநாட்டை சேர்ந்த விழாவாகவும் காலப்போக்கில் இன்று அத்திருவிழா தென்தமிழகத்தில் கோவில்களோடு நின்றுவிட்டது. கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் பத்து நாட்கள் கொண்டாடப்படும்போது,  கேரளாவே பூக்களால் போர்த்தியதுபோல் காட்சியளிக்கும். இத்திருவிழாவுக்கான புராண கதைதான் என்ன?

திருவோண பண்டிகையின் புராண கதை

முன்காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஆட்சி செய்துள்ளார். இவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மகாபலிக்கு தன் ஆட்சியை மண்ணுலகம் தாண்டி ஆட்சி செய்ய விரும்பினான், அதன்படி தன் அரசகுருவான சுக்ராச்சாரியார் யிடம் ஆலோசனை கேட்டபோது அவர் யாக வேள்வி செய்து தானம் செய்தால் இந்திர பதவியை அடையாளம் என்று கூறினார்.

ஓணம் பண்டிகை – அத்தப்பூ கோலமிடல்

மகாபலி உடனே வேள்வியை தொடங்கினான் மகாபலியின் உறுதியான வேள்வி இந்திரனின் சிம்மாசனத்தில் உள்ள பாண்டுகம்பளத்தை நடுங்க வைத்தது. தேவர்கள் அச்சத்தில் விஷ்ணு பகவானை நாட, மகாவிஷ்ணு மகாபலியை சோதிக்கும் வகையில், வாமன அவதாரத்தில் பூமிக்கு வந்து, மகாபலியிடம் தனக்கு 3 அடி நிலம் வேண்டுமென்று கேட்டார்.

இதை அறிந்த சுக்ராச்சாரியார் வந்திருப்பது மாயாவி ஒப்புக்கொள்ளாதே என்றார். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வேள்வி முழுமை அடையாது என்று மகாபலி சம்மதித்தார். என் காலால் தான் அளவு செய்வேன் என்றார்.

உருவமோ சிறியது அவர் பாதமும் சிறியது என்று சரி என்று ஒத்துக்கொண்டு கமண்டலத்தில் உள்ள நீரை இறைத்து ஆசி பெற முற்படும் போது நீரை வெளியே வர விடாமல் கமண்டல துவாரத்தில் சுக்ராச்சாரியார் மறைத்து கொள்கிறார்.

வந்திருந்த வாமனர் தர்பை புல்லை எடுத்து கமண்டல துவாரத்தில் குத்தினார் அது சுக்ராச்சாரியார் கண்ணில் பட்டது. பிறகு நீர் இறைத்து மகாபலி சம்மதம் தெரிவிக்க, வாமன அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபமாக எழுந்து உலகை இரண்டு் அடி அளந்தார்.

மூன்றாவது அடியையும் விஷ்ணு கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாபலி, தனது வாக்கின் படி மூன்றாவது அடிக்கு  தனது தலையைக் கொடுத்துள்ளார்.

அப்போது, “உனது தலையை அளந்தால். நீ பாதாளலோகம் போய்விடுவாய்!” என்றார் மகாவிஷ்ணு, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று மகாபலியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மகாபலி, “ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளில், நான் எனது மக்களைச் சந்திக்க வருவதற்கு வரம் வேண்டும்!” என்று கேட்டுள்ளார். அதன்படி மகாவிஷ்ணு,  நட்சத்திரங்களில் திரு என்ற அடைமொழி உடைய நட்சத்திரமான திருவோண நாளில் மக்களைச் சந்திக்க வருவதற்கு மகாபலிக்கு வரம் கொடுத்துவிட்டு, மகாபலி தலையை மூன்றாவதாக அளந்தார் பின்னர், பெற்ற வரத்தின்படி மகாபலி ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில் மக்களைச் சந்திக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது.

திருவோண நாளில் நாட்டு மக்களைக் காணவரும் மகாபலி மன்னரை வரவேற்க வீடுகளின் முன் அத்தப்பூ என்று அழைக்கப்படும், விதவிதமான பூக்களிலாலான பூக்கோலம் இடுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், ஆகியவற்றில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர். மகாபலி மன்னன் தங்களை காண வருவதாக நம்பிக்கைக் கொண்ட மக்கள், மன்னனை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பது மக்களின் வழக்கம்.

சாதி, மத, பாகுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுவதால் இந்த பத்து நாளும் திருவோணம் திருவிழாவாக நடக்கும்.

திருவோணத்தை வரவேற்க வித விதமான உணவுகள், விருந்துகள் என கேரளாவும், குமரி மாவட்டமும் களைக்கட்ட தொடங்கும்.

தமிழ் மரபு

இவ்வாறாக திருவோணம் தமிழ் பண்டிகை தான் என்பது உண்மை ஆகிறது அனால் தமிழர்களாகிய நாம் நம் மரபையும் வரலாற்றையும் மறந்து பலவற்றை இழந்துவிட்டோம். இருக்கும் விஷயங்களையாவது நாம் பேணி பாதுகாக்க வேண்டும்.

Exit mobile version