துரியோதனன் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா!

சமீப காலமாக சாதிகளின் பேர் மிக கொடிய சம்பவங்கள் நாம் வாழும் இந்த சமூகத்தில் நடந்தேறி வருகின்றது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்ணில் நம்முடன் வாழும் சக மனிதனிடம் அதிகப்படியான ஏற்ற தாழ்வுகள்…

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தனையோ தேச தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அரும்பாடு பட்டனர். ஞானிகளும் மகான்களும் எளியோர்க்கு உபதேசம் செய்தார்கள் ஆனால் இந்த ஏற்ற தாழ்வுகள் மாரியபாடில்லை. அது இருக்க அனைவராலும் வெறுக்கப்பட்ட துரியோதனனும் சாதிகள் இல்லை என்று முழக்கமிடுகிறான்.

ஒருமுறை அரச குமாரர்கள் பங்குபெறும் போட்டியில் கர்ணனின் வீரம் அவன் பிறப்பால் ஒதுக்கப்படும் போது துரியோதனன் வெகுண்டு எழுந்து கர்ணனை அங்கதேசத்து மன்னனாக முடிசூட்டி கௌரவித்தான். இது நாம் அனைவருக்கும் தெரிந்த கதையே. இந்த காட்சி “கர்ணன்” திரை படத்தில் மிக அழகாக காட்சி படுத்த பட்டுள்ளது. உங்களுக்காக கீழே அந்த காட்சியை பதிவிடுகிறேன்.

கர்ணன் 1964 – வில்வித்தை போட்டி & துரியோதனன் நட்பு

அவ்வாறு கர்ணனின் வீரம் பிறப்பாலும் இனத்தாலும் அவமதிக்கப்படும் போது துரியோதனன் தன் ஆசான் துரோணாச்சார்யர் அவர்களுக்கே “சாதிகள் இல்லை” என்று பாடம் கற்பித்தான். துரியோதனன் கூறியதாவது,

கற்றவர்க்கும், நலம் நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை
உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக்
கொற்றவர்க்கும், உண்மையான கோது இல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும், ஒன்று சாதி; நன்மை தீமை இல்லையால். – 67

அரி பிறந்தது, அன்று, தூணில்; அரனும் வேயில் ஆயினான்;
பரவை உண்ட முனியும், இப் பரத்துவாசன் மைந்தனும்,
ஒருவயின்கண், முன் பிறந்தது; ஒண் சரத்தின் அல்லவோ,
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே? – 68

வில்லிபுத்ரர் | வில்லிபாரதம் – வாரணாவதச் சருக்கம்

பொருள்:

படித்தவர்களுக்கும், அழகுடைய பெண்களுக்கும், கொடை வள்ளல்களுக்கும், வீரர்களுக்கும், சிறந்த அரசாட்சி புரிந்தவர்க்கும், உண்மையான குற்றமற்ற ஞானத்தையும் ஒழுக்கத்தையும் உடையவர்களுக்கும் சாதி ஒன்றே. உயர்வு தாழ்வு என்ற பாகுபாடில்லை.

முற்காலத்தில் திருமால் பிறந்தது தூணில் – அந்த தூண் அவரது அன்னையா?

கடலை பருகிய முனிவர் அகத்தியரும், பாரத்துவாஜர் மகனான துரோணாச்சார்யார் இருவரும் கும்பத்தில் பிறந்தவர்கள் (டெஸ்ட்யூப் பேபி) – அந்த கும்பம் அவர்களுடைய அன்னையா?

பிறரால் தோற்கடிக்கவே முடியாத வெற்றியை உடைய முருக கடவுள் ஒரு சரீரத்தில் இருந்து வர வில்லை, அவர் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றியவர் – நெற்றிக்கண் அவரது அன்னையா?

உட்கருத்து:

பிறப்பால் ஒரு மனிதரை உயர்த்தியும் தாழ்த்தியும் பாகுபாடு செய்வது ஐம்பெரும் பாவங்களை காட்டிலும் கொடிய செயல்… ஒரு மனிதன் கல்வியால், வீரத்தால், பண்பால், ஒழுக்கத்தால், அழகால், குணத்தால் மட்டுமே உயர்வடைகின்றான்.

Load More Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Check Also

உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!!

வணக்கம்! இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ள…